இறுதி டெஸ்ட்: இங்கிலாந்து ஆதிக்கம்

இலங்கைக்கு எதிரான இறுதி டெஸ்ட்: இங்கிலாந்து ஆதிக்கம்

by Staff Writer 23-11-2018 | 8:45 PM
Colombo (News 1st) ஜொனி பெயார்ஸ்டோவின் சாதுர்யமான சதத்தின் மூலம் இலங்கைக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தியுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 312 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது இன்றைய முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. ஆட்டத்தை ஆரம்பித்த ரொரி பேர்ன்ஸ் - கீட்டன் ஜெனிங்ஸ் ஜோடியால் 22 ஓட்டங்களையே பகிர முடிந்தது. ரொரி பேர்ன்ஸ் 14 ஓட்டங்களுடனும், கீட்டன் ஜெனிங்ஸ் 13 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க இங்கிலாந்து 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது. எனினும், ஜொனி பெயார்ஸ்டோ மற்றும் அணித்தலைவர் ஜோ ரூட் ஜோடி மூன்றாம் விக்கெட்டிற்காக 100 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டது. அணித்தலைவர் ஜோ ரூட் 46 ஓட்டங்களுடன் வெளியேறினார். ஜொனி பெயார்ஸ்டோவுடன் அடுத்து இணைந்த பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியை வலுப்படுத்தினார். பென் ஸ்டோக்ஸ் 88 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பௌண்டரிகளுடன் 57 ஓட்டங்களைப் பெற்றார். பொறுமையாக துடுப்பெடுத்தாடிய ஜொனி பெயார்ஸ்டோ தனது ஆறாவது டெஸ்ட் சதத்தை அடைந்தார். 186 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஒரு சிக்ஸர், 9 பௌண்டரிகளுடன் 110 ஓட்டங்களைப் பெற்றார். ஜோஸ் பட்லர், பென் போக்ஸ் ஆகியோரால் பெரிதாகப் பிரகாசிக்க முடியவில்லை. இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 312 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது இன்றைய முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. மொயின் அலி 23 ஓட்டங்களுடனும் ஆதில் ரஷீட் 13 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். பந்துவீச்சில் லக்சான் சந்தகேன் 4 விக்கெட்களையும், மலிந்த புஷ்பகுமார 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.