மனிதப்புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது

மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது

by Staff Writer 23-11-2018 | 3:22 PM
Colombo (News 1st) மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 27 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்தார். கடந்த 16 ஆம் திகதி முதல் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. பலத்த மழை காரணமாகவும் மன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ வௌிநாடு சென்றிருப்பதாலும் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. பணிகள் இடைநிறுத்தப்படும் வரை 231 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்தார். இவற்றில் 18 சிறுகுழந்தைகளின் எலும்புக்கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். அனைத்து மனித எச்சங்களும் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மன்னார் சதொச கட்டட வளாகத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் கட்டட நிர்மாணப் பணிகளுக்காக நிலம் தோண்டப்பட்டபோது இந்த மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவிற்கு அமைய மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் கடந்த வருடம் மே மாதம் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. இந்த பணிகளில் மன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட சட்ட வைத்திய அதிகாரிகள் குழுவினரும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ ஆகியோரும் ஈடுபட்டுள்ளனர்.