தெரிவுக்குழு நியமனத்திற்கு ஆதரவாக 121 வாக்குகள்

பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமனத்திற்கு ஆதரவாக 121 வாக்குகள்

by Staff Writer 23-11-2018 | 3:16 PM
Colombo (News 1st) பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமனம் தொடர்பான சபாநாயகரின் தீர்மானத்திற்கு ஆதரவாக 121 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. எனினும், வாக்கெடுப்பு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளியேறினர். பாராளுமன்ற அமர்வு இன்று காலை 10.30 க்கு ஆரம்பமாகியது. இன்று காலை இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் பாராளுமன்ற அமர்வு, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஆரம்பமாகியது. இதன்போது, பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு நியமிக்கப்பட்ட 12 உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர் அறிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் தினேஸ் குணவர்தன, எஸ்.பி. திசாநாயக்க, நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசிங்க மற்றும் விமல் விரவன்ச ஆகியோரும் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் லகஷ்மன் கிரியெல்ல, ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், மனோ கணேசன், பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோரும் , இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் மாவை சேனாதிரசாவும் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் விஜித ஹேரத்தும் தெரிவுக்குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டார். தற்போதைய சூழ்நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆளும் கட்சியாக இருப்பதனால், தெரிவுக்குழுவில் தமக்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் வழங்கப்பட வேண்டும் என தினேஸ் குணவர்தன இதன்போது சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார். எனினும், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதால், தற்போது அரசாங்கம் ஒன்று இல்லை என்ற அடிப்படையில் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்ற தெரிவுக்குழுவில் குழப்ப நிலை நிலவுவதால், தெரிவிக்குழு உறுப்பினர்களை நியமிப்பதற்கு வாக்கெடுப்பை நடத்துமாறு லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து சபாநாயகரின் தீர்மானத்திற்கு அமைய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பு நடைபெறும் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையிலிருந்து வௌிநடப்பு செய்தனர். இலத்திரனியல் முறையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சபாநாயகர் சமர்ப்பித்த தெரிவுக்குழுவிற்கு ஆதரவாக 121 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பொரும்பான்மை வாக்குகளுடன் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். இதனையடுத்து, பாராளுமன்றம் எதிர்வரும் 27 ஆம் மற்றும் 29 திகதிகளில் கூடவுள்ளதாக சபாநாயகரால் அறிவிக்கப்பட்டுள்ளது.