ரணில், மஹிந்த கூட்டு அரசாங்கம் - சி.வி. யோசனை

ரணில் விக்ரமசிங்கவும் மஹிந்த ராஜபக்ஸவும் கூட்டு அரசாங்கத்தை ஸ்தாபிக்கலாம் - சி.வி. விக்னேஸ்வரன் யோசனை

by Staff Writer 22-11-2018 | 7:13 AM
Colombo (News 1st) ஜனாதிபதியின் தலைமையில், மஹிந்த ராஜபக்ஸவும் ரணில் விக்ரமசிங்கவும் கூட்டு அரசாங்கத்தை ஸ்தாபிக்கலாம் என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் யோசனை முன்வைத்துள்ளார். அவ்வாறான உடன்படிக்கையை கைச்சாத்திட்டு நாட்டின் முக்கிய பிரச்சினையை இருவரும் தீர்க்க முன்வரலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரணிலைப் பிரதமராக ஏற்று, மஹிந்தவை எதிர்க்கட்சித் தலைவராக்கி இருதரப்பிற்கிடையிலும் உடன்படிக்கையை ஏற்படுத்த முடியும் எனவும் சி.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலிய பிரதி உயர்ஸ்தானிகர் விக்டோரியா கோக்லியுடனான சந்திப்பின்போதே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலிய பிரதி உயர்ஸ்தானிகர் விக்டோரியா கோக்லிக்கும், முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (21) நடைபெற்றது. இந்த சந்திப்பு சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் நீடித்தததாக முன்னாள் முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான கூட்டு அரசாங்கத்தை ஸ்தாபித்து தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு, கைதிகள் விடுவிப்பு, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல் போன்ற விடயங்களை முன்னெடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், எதிர்க் கட்சியினருக்கு எதிராக நியமிக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றங்களின் நடவடிக்கையை தற்போதைய அவசரமும் அவசியமும் கருதி தள்ளிவைக்கலாம் என எண்ணுவதாகவும் முன்னாள் முதனமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.