நிதிக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நபர்களை உயர் பதவிகளுக்கு மீண்டும் நியமிப்பது ஏன்?

நிதிக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நபர்களை உயர் பதவிகளுக்கு மீண்டும் நியமிப்பது ஏன்?

எழுத்தாளர் Staff Writer

22 Nov, 2018 | 9:30 pm

Colombo (News 1st) நிதிக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள கலாநிதி நாலக்க கொடஹேவா இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் நேற்று (21) செய்தி வௌியிட்டது.

இலங்கை பங்குப் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவராக செயற்பட்ட போது அவர் சில நிறுவனங்களின் பங்குகளின் விலையை சந்தேகத்திற்கு இடமான முறையில் வேகமாக அதிகரித்ததுடன், அதனுடன் தொடர்புபட்ட ”பம்பிங் டம்பிங்” எனப்படும் பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.

2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் திகதி டெய்லி மிரர் பத்திரிகை வெளியிட்ட தகவல்களுக்கு அமைய, பங்குச்சந்தையில் மேற்கொண்ட முறையற்ற கொடுக்கல் வாங்கலின் பின்னர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட சிட்ரஸ் லெஷர் நிறுவனத்துடன் தொடர்புபட்ட பஸ்கடுவ பீச் ரிசோட் நிறுவனத்தில் 10 ஆவது மற்றும் 16 ஆவது மிகப்பெரிய பங்குதாரராகவும் நாலக்க கொடஹேவா செயற்பட்டுள்ளார்.

மற்றுமொரு சர்ச்சைக்குரிய நிறுவனமான Colombo Land and Development நிறுவனத்தின் 7 ஆவது பங்குதாரராகவும் இவர் செயற்படுகின்றார்.

திலீப் ஜயவீர மற்றும் வருணி அமுனுகம ஆகியோருடன் தொடர்புபட்ட திவச நிதி நிறுவனத்தின் தலைவராகவும் கலாநிதி நாலக்க கொடஹேவா செயற்பட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வௌியிட்டுள்ளது.

மோசடி மிகு கிரிஷ் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புபட்டு ராஜபக்ஸ குடும்பத்தின் உறுப்பினர் ஒருவருக்கு பெருந்தொகை நிதியைப் பெற்றுக்கொடுப்பதில் இடைத்தரகராகவும் இவர் செயற்பட்டுள்ளமை தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் நிறுவனத்தின் 29 வீதமான பங்குகளை விற்பனை செய்த பிரச்சினைக்குரிய கொடுக்கல் வாங்கலுடன் நாலக்க கொடஹேவா தொடர்புபட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியது.

2015 ஆம் ஆண்டு ராஜபக்ஸ அரசாங்கம் தோல்வியடைந்த பின்னர் நாலக்க கொடஹேவா தொடர்பில் விசாரணைகள்
ஆரம்பமாகியதுடன், பிணையங்கள் மற்றும் பங்குப்பரிவர்தனை ஆணைக்குழுவின் முறையற்ற கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்றன.

இளைஞர்கள் மத்தியில் பங்குச்சந்தை முதலீட்டு ஊக்குவிப்புத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பணத்தை நாமல் ராஜபக்ஸவின் கோரிக்கைக்கு ஏற்ப, வேறு விடயங்களுக்கு வழங்கியமை தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பமாகின.

இந்த விடயங்கள் தொடர்பில் நாலக்க கொடஹேவாவிற்கு எதிராக பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், தற்போதும் அவர் சந்தேக நபராகவே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கலாநிதி நாலக்க கொடஹேவாவிற்கு வழங்கப்பட்ட நியமனத்தைப் போன்று மேலும் பல சர்ச்சைக்குரிய நியமனங்கள் அண்மையில் வழங்கப்பட்டன.

பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட கபில சந்திரசேன ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

மக்களின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் அவர் இராஜிநாமா செய்யத் தீர்மானித்தார்.

குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நபர்கள் மீண்டும் மீண்டும் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவதால் எதிர்பார்க்கப்படுவது என்ன ?


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்