நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறுகிய காலத்தினுள் ஏற்பட்ட மாற்றமல்ல: பேராசிரியர் லலித் சமரக்கோன்

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறுகிய காலத்தினுள் ஏற்பட்ட மாற்றமல்ல: பேராசிரியர் லலித் சமரக்கோன்

எழுத்தாளர் Staff Writer

22 Nov, 2018 | 8:04 pm

Colombo (News 1st) நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பில் தேசிய பொருளாதார சபையின் செயலாளர், பேராசிரியர் லலித் சமரக்கோன் கருத்துத் தெரிவித்தார்.

பேராசிரியர் லலித் சமரக்கோன் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோர் அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்து கொண்டு நாட்டின் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் விளக்கமளித்து வருகின்றனர்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறுகிய காலத்தினுள் ஏற்பட்ட மாற்றமல்ல என பேராசிரியர் சமரக்கோன் குறிப்பிட்டார்.

எந்தவொரு பிரச்சினையும் ஒரு குறிப்பிட்ட காலத்தினுள் மாத்திரம் ஏற்படாது. ஆகவே, நாம் ஆகக்குறைந்தது மத்திய காலப்பகுதிக்குள் பொருளாதாரம் எவ்வாறு அமைந்திருந்தது என்பதனைப் பார்க்க வேண்டும். 2014 ஆம் ஆண்டு இறுதிக்காலத்தில் இருந்து இதுவரை மொத்த கடன் 49 வீதத்தால் அதிகரித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு எமது வரவு வெலவுத்திட்டப் பற்றாக்குறை 5.7 வீதமாகக் காணப்பட்டது. 2015 ஆம் ஆண்டு அது 7.6 வீதமாக அதிகரித்தது. 2017 ஆம் ஆண்டு 5.5 வீதமாக அமைந்தது. நாம் எந்த நிலைமையில் இருந்தோமோ இன்றும் அதே நிலைமை தான் ஏற்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு நிலுவைக் கொடுப்பனவு 2.5 வீதமாகக் காணப்பட்டது. 2018 ஆம் ஆண்டு அது 2.9 வீதமாகக் காணப்படுகின்றது. அதாவது, நிலுவைக் கொடுப்பனவு வீதம் அதிகரித்துள்ளது. 2004 ஆம் ஆண்டு 5 வீதமாகக் காணப்பட்ட பொருளாதார அபிவிருத்தி வேகம் கடந்த வருடம் 16 வருடங்களின் பின்னர் ஆக்குறைந்த பொருளாதார அபிவிருத்தி வேகமாக மாறியது. இந்த வருடமும் நாம் 4 வீத பொருளாதார அபிவிருத்தி வேகத்தை எதிர்பார்க்கின்றோம். ஆகவே, எமது நாட்டில் பொருளாதாரம் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. எனினும், இவை இன்று ஏற்பட்ட விடயங்களல்ல. தொடர்ந்து நிலவிய செயற்பாடுகள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை நாட்டின் பொருளாதாரத்தை பாதிப்பிற்கு உட்படுத்தும் வகையிலான பல சம்பவங்கள் பதிவாகின.

மத்திய வங்கியில் இடம்பெற்ற முறிகள் மோசடியால் ஏற்பட்ட பெருந்தொகை நட்டம் இதுவரை உறுதியாக அறிவிக்கப்படாத நிலையில், இந்த செயற்பாட்டினால் நாட்டின் வட்டி வீதம் 3 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மோசடி காரணமாக ஊழியர் சேமலாப நிதியம் உள்ளிட்ட பல நிதியங்களுக்கு பாரிய நட்டம் ஏற்பட்டமையினால், முதலீட்டு நம்பிக்கையும் சவாலுக்கு உட்படுத்தப்பட்டது.

தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் 2016 , 2017 நிதியாண்டில் மாத்திரம் 28.2 பில்லியன்நட்டத்தை எதிர்கொண்டுள்ளது.

கடந்த சில வருடங்களில் இவ்வாறு நிறுவனங்கள் அடைந்துள்ள நட்டத்தினால் நாட்டின் கட்ன் சுமை மேலும் அதிகரித்துள்ளது.

மத்திய அதிவேக வீதி உள்ளிட்ட சில முதலீட்டு திட்டங்களுக்கு அதிக வட்டி வீதத்தில் வணிகக் கடன்களைப் பெற்றுக்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் நேரடியாக நாட்டின் பொருளாதாரத்தில் அதிகத் தாக்கம் செலுத்தியது.

கடந்த ஜூலை மாதம் Moody’s கடன் தரப்படுத்தலில் இலங்கைக்கு காணப்பட்ட B தரம் B1 ஆகக் குறைவடைந்தது.

பின்னர் B1 இலிருந்து B2 ஆக இலங்கை கடன் தரப்படுத்தலில் பின்தங்கியது.

பொருளாதாரத்தின் இந்த அனைத்து விடயங்களும் உரிய முறையில் கவனத்திற்கொள்ளப்பட வில்லை என தேசிய பொருளாதார சபையின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

எனினும், இந்தக் கடன்களை மீள செலுத்தும் சவாலை இலங்கை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், குறுகிய காலத்திற்குள் 2 பில்லியனை பெற்றுக்கொள்ளும் இயலுமை இருப்பது புலப்படுவதாகவும் கடனை செலுத்துவது தொடர்பில் இலங்கைக்கு இருக்கும் இயலுமை தொடர்பில் எவ்வகையிலும் சந்தேகம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்