by Staff Writer 22-11-2018 | 9:07 AM
இந்தியாவுக்கு எதிரான முதலாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில், டக்வேர்த் லூயிஸ் முறைப்படி அவுஸ்திரேலியா 4 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
இது 2012 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் அவுஸ்திரேலியா அடைந்த முதல் சர்வதேச இருபதுக்கு 20 வெற்றியாக பதிவானது.
பிரிஸ்பேர்னில் நடைபெற்ற இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா சார்பாக சகலதுறை வீரரான கிளேன் மெக்ஸ்வெல் 46 ஓட்டங்களை பெற்றார்.
அவுஸ்திரேலியா 16.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்களை பெற்றிருந்தபோது மழை காரணமாக ஆட்டம் தடைப்பட்டது.
ஒரு மணித்தியாலத்துக்கு பின்னர் மீண்டும் போட்டி ஆரம்பமானதுடன் ஓவர்களின் எண்ணிக்கை 17 ஆக குறைக்கப்பட்டது.
அவுஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்களை பெற்றது.
டக்வேர்த் லூயிஸ் முறைப்படி 17 ஓவர்களில் இந்தியாவின் வெற்றி இலக்கு 174 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
இந்தியா சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் 42 பந்துகளில் 72 ஓட்டங்களை விளாசினார்.
ரிஷப் பாண்ட் மற்றும் தினேஸ் கார்திக் ஜோடி ஐந்தாவது விக்கெட்காக 51 ஓட்டங்களை பகிர்ந்தது.
இறுதி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 11 ஓட்டங்கள் தேவைப்பட்டதுடன், அந்த ஓவரை வீசிய மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
தினேஸ் கார்திக் 30 ஓட்டங்களுடனும் குர்னால் பாண்டியா 2 ஓட்டங்களுடனும் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் இந்திய அணியால் 17 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 169 ஓட்டங்களை பெற முடிந்தது.
இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 தொடரில் 1 - 0 என அவுஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது.