Moody's-இன் தரப்படுத்தல் தீர்மானம் ஆதாரமற்றது: இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு

by Staff Writer 21-11-2018 | 8:52 PM
Colombo (News 1st) எதிர்வரும் வருடங்களில் 4 வீத பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும் என மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார். தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் கொழும்பில் இன்று நடைபெற்ற கருத்தரங்கொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். Economic Outlook என்ற பெயரில் கொழும்பு பல்கலைக்கழக நிதி மற்றும் முகாமைத்துவ பீடம் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. இதேவேளை, கடன் தரவரிசையில் இலங்கையைப் பின்தள்ளுவதற்கு Moody's சர்வதேச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த தரவரிசைக்கமைய, இலங்கை இதுவரை காலமும் உள்வாங்கப்பட்டிருந்த B1 பிரிவிலிருந்து B2 பிரிவிற்கு பிள்தள்ளப்பட்டுள்ளதாக Moody's நிறுவனம் அறிவித்துள்ளது. நாட்டின் கடன் நிலைமை, மீண்டும் செலுத்துவதற்கான இயலுமை உள்ளிட்ட பல விடயங்களைக் கருத்திற்கொண்டு இந்த சர்வதேசத் தரவரிசை மேற்கொள்ளப்படுகிறது. அரசியல் ஸ்திரமின்மையால் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா தொடர்பில் கருத்திற்கொண்டு இலங்கை பின்தள்ளப்பட்டுள்ளதாக Moody's நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், Moody's நிறுவனத்தின் இந்த புதிய தரப்படுத்தல் ஆதாரமற்றது என இலங்கை மத்திய வங்கி அறிக்கையொன்றினூடாகத் தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதார அடிப்படை தொடர்பில் எந்தவொரு மதிப்பீடுமின்றி இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் Moody's நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட கடன் தரப்படுத்தலுக்கு பின்னரான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தில் கருத்திற்கொள்ளக்கூடிய மாற்றம் நிகழவில்லை எனவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் Moody's நிறுவனத்தின் கடன் தரவரிசைப் பட்டியலில் B பிரிவில் இருந்த இலங்கை ஜூலை மாதத்தில் B1 பிரிவிற்கு பின்தள்ளப்பட்டது. அந்தக் காலப்பகுதியில் பொருளாதார விவகார அமைச்சு ஐக்கிய தேசியக் கட்சியிடமே காணப்பட்டது. இதேவேளை, பல நாடுகள் தமது நாட்டின் பிரஜைகள் இலங்கைக்கு சுற்றுலா செல்வது தொடர்பில் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தன. நாட்டில் எந்தவொரு அபாயகரமான சம்பவங்களும் பதிவாகாத நிலையில், அந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. Moody's சர்வதேச நிறுவனத்தின் பிந்திய தரப்படுத்தல் தீர்மானமும் அத்தகையை நடவடிக்கையின் ஓர் அங்கமல்லவா?