பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு 7 பேரை பெயரிட்டுள்ளதாக தினேஸ் குணவர்தன சபாநாயகருக்கு அறிவிப்பு

by Staff Writer 21-11-2018 | 10:13 PM
Colombo (News 1st) பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் சர்ச்சையை ஏற்படுத்திய பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்காக தாம் 7 உறுப்பினர்களைப் பெயரிட்டுள்ளதாக சபை முதல்வர் தினேஸ் குணவர்தன, சபாநாயகருக்கு அறிவித்துள்ளார். தினேஸ் குணவர்தன, எஸ்.பி. திசாநாயக்க, நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசிங்க, விமல் வீரவன்ச, திலங்க சுமதிபால, உதய கம்மன்பில ஆகியோரது பெயர்களே தெரிவுக்குழுவிற்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே 2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலை அடுத்தும் 2015 ஜனாதிபதித் தேர்தலை அடுத்தும் சிறுபான்மை அரசாங்கங்கள் காணப்பட்டபோது தெரிவுக்குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இருந்து நியமிக்கப்பட்டதாக தினேஸ் குணவர்தன சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆளும் கட்சி என்ற வகையில், தாம் பெரும்பான்மை உறுப்பினர்களைப் பெயரிட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிவுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 12 ஐ விட அதிகரிக்க வேண்டும் என தீர்மானிக்கப்படும் பட்சத்தில், அதனை அறிவிக்குமாறும் அவ்வாறு அறிவிக்கப்பட்டால் மேலதிக உறுப்பினர்களைப் பெயரிட முடியும் எனவும் தினேஸ் குணவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.