நிதிக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நாலக்க கொடஹேவா காப்புறுதிக் கூட்டுத்தாபனத் தலைவராக நியமனம்

நிதிக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நாலக்க கொடஹேவா காப்புறுதிக் கூட்டுத்தாபனத் தலைவராக நியமனம்

எழுத்தாளர் Staff Writer

21 Nov, 2018 | 9:45 pm

Colombo (News 1st) சில அரச நிறுவனங்களில் உயர் பதவிகளுக்கு புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் பெரும் சர்ச்சைக்குள்ளான ஒருவர் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கலாநிதி நாலக்க கொடஹேவாவே இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை பங்குப் பரிவர்தனை ஆணைக்குழுவின் தலைவராக செயற்பட்ட போது அவர் சில நிறுவனங்களின் பங்குகளின் விலையை சந்தேகத்திற்கு இடமான முறையில் வேகமாக அதிகரித்ததுடன், அதனுடன் தொடர்புபட்ட ”பம்பிங் டம்பிங்” எனப்படும் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.

அத்துடன், மோசடிமிகு கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டு, ராஜபக்ஸ குடும்பத்தின் ஒருவருக்கு பாரிய நிதியை வழங்கிய சம்பவத்தின் இடைத்தரகராக செயற்பட்டதாகவும் நாலக்க கொடஹேவா மீது குற்றம் சுமத்தப்பட்டது.

நாலக்க கொடஹேவா இதற்கு முன்னரும் இரண்டு தடவைகள் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் உயர் பதவிகளை வகித்துள்ளார்.

காப்புறுதி கூட்டுத்தாபனம் தனியார் மயப்படுத்தப்பட்ட பின்னரும் சிறிது காலம் அவர் அங்கு பணியாற்றிய போதிலும் சேவை ஒப்பந்தம் நீடிக்கப்படவில்லை.

ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் மீண்டும் முகாமைத்துவ பணிப்பாளராக காப்புறுதி கூட்டுத்தாபனத்தில் இணைந்து கொண்ட அவர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பொன்றின் பிரகாரம் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்கும் தீர்மானத்திற்கு சில மாதங்களுக்கு முன்னர் நீங்கினார்.

அதன் பின்னர் அவர் பங்கு பரிவர்தனை ஆணைக்குழுவின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் நிறுவனத்தின் 29 வீதமான பங்குகளை விறபனை செய்த சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கலுடன் அவர் தொடர்புபட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்படுகின்றது.

2015 ஆம் ஆண்டு ராஜபக்ஸ அரசாங்கம் தோல்வியடைந்த பின்னர் நாலக்க கொடஹேவா தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், பங்குப் பரிவர்தனை ஆணைக்குழுவின் முறையற்ற நிதிப் பாவனை தொடர்பிலும் விசாரணைகள் நடைபெற்றன.

இளைஞர்களுக்கு மத்தியில் பங்குச்சந்தை முதலீட்டு ஊக்குவிப்புத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த பணத்தை நாமல் ராஜபக்ஸவின் கோரிக்கைக்கு ஏற்ப வேறு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த விடயங்கள் தொடர்பில் நாலக்க கொடஹேவாவிற்கு எதிராக சில வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஒரு சந்தேக நபராவார்.

கலாநிதி நாலக்க கொடஹேவாவின் நியமனத்தைப் போன்று மிகவும் மோசமான சில நியமனங்கள் கடந்த சில தினங்களில் வழங்கப்பட்டுள்ளன.

பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள கபில சந்திரசேன ஸ்ரீலங்கன் விமான சேவையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர் வெளிப்படுத்தப்பட்ட மக்களின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் கபில சந்திரசேன இராஜினாமா செய்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்