Colombo (News 1st) ஜனநாயகத்தை பாதுகாக்க ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் கொழும்பு மாநகர சபை முன்றலில் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டமொன்று இன்று ஆரம்பிக்கப்பட்டது.
சிவில் அமைப்புகள் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் தொடர்புடைய தொழிற்சங்க ஒன்றியத்தினால் இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது, நீதியான சமூகத்திற்கான மக்கள் அமைப்பைச் சேர்ந்த கலாநிதி தம்பர அமில தேரர் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,
தற்போது எதிரிக்கு தாம் விரும்பிய வகையில் சதுரங்கக் காயை நகர்த்த முடியாது போயுள்ளது. அதனாலேயே தத்தளித்துக் கொண்டிருக்கின்றார். ஒரு தவறை மறைப்பதற்கு மேலும் 7, 8 தவறுகளை செய்த வண்ணமுள்ளனர். கழிவுகளுடன் கழிவு சேருவதைப் போன்று, இதன் ஊடாக தமது வழக்குகளை நிறைவு செய்ய முடியும் என மஹிந்த ராஜபக்ஸ எண்ணினார். சட்ட மா அதிபர் அலுவலகத்திலுள்ள கோப்புகளை எடுத்து, அவற்றில் வெற்றுத்தாள்களை வைக்க முடியும் என எண்ணினார். பொலிஸ் உத்தியோகத்தர்களை மாற்றி பகல் கொள்ளையில் ஈடுபடக்கூடிய தருணம் இதுவென எண்ணினார். இவை தூய்மையான நோக்கம் அல்ல. இவை கீழ்த்தரமான எண்ணமாகும். இது நாட்டிற்கு பாதகமானவை. அதனால் அச்சமின்றி நிமிர்ந்திருந்து சந்தேகமின்றிப் போராடுங்கள்.