நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும்

நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும்

எழுத்தாளர் Staff Writer

21 Nov, 2018 | 6:00 pm

Colombo (News 1st) வங்காள விரிகுடாவில் தாழமுக்க வலயம் வலுப்பெற்றுள்ளதால், நாட்டின் பல பகுதிகளில் கடும் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வட மாகாணத்தின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீட்டர் வரையிலான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக நந்திக்கடல் நீரேரி நிறைந்து உடைப்பெடுத்துள்ளது.

கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழையால் நந்திக்கடல் நீரேரி நிரம்பியுள்ளதுடன், வட்டுவாகல் பாலத்திற்கு மேலாகவும் நீர் நிரம்பியுள்ளது.

இந்த நிலையில், நந்திக்கடல் நீரேரி நேற்றிரவு உடைப்பெடுத்து, முல்லைத்தீவு கடலுடன் சங்கமித்துள்ளது.

இதனால் வட்டுவாகல் கடல் நீரேரியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மீன்களின் பெருக்கம் அதிகரிக்கும் என மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், வட்டுவாகல் ஆற்றை ஆழப்படுத்துமாறு மீனவர்கள் தொடர்ந்தும் கோரி வருகின்றனர்.

இதேவேளை, புத்தளம் – எழுவாங்குளம் பாலத்திற்கு மேலாக சுமார் 3 அடிக்கு வெள்ளம் பாய்வதால் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

வில்பத்து சரணாலயத்திற்கு செல்லும் பயணிகள் இதனால் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்