சீனாவுடனான ஒப்பந்தத்திலிருந்து விலகும் மாலைதீவு

சீனாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து விலகும் மாலைதீவு

by Staff Writer 20-11-2018 | 6:05 AM
சீனாவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து மாலைதீவு விலகவுள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடு ஒன்றுடன், மிகச்சிறிய நாடு ஒன்று ஏற்படுத்திக்கொண்ட இந்த ஒப்பந்தம் பிழையான ஒன்றென மாலைதீவின் ஆளும் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மொஹம்மட் நஷீட் தெரிவித்துள்ளார். மாலைதீவின் புதிய அரசாங்கத்தினால் வௌியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பானது, சீனாவிற்கு அந்நாட்டில் ஏற்பட்ட பாரிய பின்னடைவாகக் கருதப்படுகின்றது. சீனாவிற்கும் தமது நாட்டிற்கும் இடையிலான வர்த்தக வேறுபாடு மிகப்பெரியது என்பதுடன், இந்த இரு தரப்புக்குமி​டையிலான திறந்த வர்த்தக உடன்படிக்கை என்பது நினைத்துக் கூடப்பார்க்க முடியாத ஒன்றென மாலைதீவு ஜனநாயகக் கட்சியின் தலைவர் மொஹம்மட் நஷீட் விபரித்துள்ளார். சீனா தமது நாட்டிடமிருந்து எதனையும் கொள்வனவு செய்வதில்லை என்பதால், குறித்த வர்த்தகமானது ஒரு தரப்பு வர்த்தகமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவுடனான திறந்த வர்த்தக உடன்படிக்கையானது, கடந்த டிசம்பரில் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனின் சீன விஜயத்தின்போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, பொதுநலவாய அமைப்பில் மீண்டும் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்ளவும் மாலைதீவுகளின் புதிய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.