இடைக்கால கணக்கறிக்கையின் மூலம் நிதியைப் பெற்றுக்கொள்வதாக அரசாங்கம் அறிவிப்பு

by Bella Dalima 20-11-2018 | 10:35 PM
Colombo (News 1st) தற்போதைய அரசியல் நிலைமையில் நாட்டின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான நிதியை செலவிடுவது தொடர்பில் சர்ச்சை நீடிக்கின்றது. இந்நிலையில், இதுபற்றி முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிடுகையில்,
பிரதமரின் நிதி ஒதுக்கீட்டை நிறுத்துமாறு கோரி பிரேரணையொன்றைக் கையளித்துள்ளனர். ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போது செலவுகளுக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அதில் பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளம் உள்ளிட் கொடுப்பனவுகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தை அவ்வாறே செலவு செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளது. வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் அந்த அனுமதி கிடைக்கும். சாதாரணமாக இடைக்கால கணக்கு ஒன்றே கொண்டுவரப்படும். நிதி அமைச்சரினால் அது தயாரிக்கப்பட்டுள்ளது. அதனை அவர் சமர்ப்பிப்பார். எனினும், அதற்கு இடையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால், எவ்வித இடைக்கால கணக்கும் இல்லாமல், ஜனாதிபதிக்கு வரி நிதியினால் நிதியை செலவு செய்வதற்கு அதிகாரம் இருக்கிறது. வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் வரை அந்த அதிகாரம் இருக்கிறது.
என குறிப்பிட்டார். இதேவேளை, இடைக்கால கணக்கு அறிக்கை தற்போது தயாரிக்கப்படுவதாக திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்தார். டிசம்பர் 31 ஆம் திகதி வரை அரசாங்கத்தின் செலவுகள் தொடர்பில் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது எனவும், சிலவேளை பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு ஏற்ப அடுத்து வரும் நாட்களுக்கான செலவுகள் இடம்பெறும் எனவும் திறைசேரியின் செயலாளர் குறிப்பிட்டார். அந்த செலவுகளுக்கு தேர்தலின் பின்னர் உருவாக்கப்படும் புதிய அரசாங்கத்தின் பாராளுமன்றம் மூலம் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டி ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.