பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவு

பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

20 Nov, 2018 | 7:20 pm

Colombo (News 1st) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவிற்கு நீர்கொழும்பு பிரிவிற்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த இடமாற்றத்தை இன்று காலை பொலிஸ் மா அதிபர் இரத்து செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர கூறினார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கொள்ளை தொடர்பான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவை நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்கு இடமாற்றும் கடிதம் கடந்த 18 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் வினவியமைக்கு, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் W.R.P.செனவிரத்ன விரிவான தெளிவூட்டலொன்றை வழங்கியுள்ளார்.

குறித்த பொலிஸ் பரிசோதகர் தனது 20 வருட சேவைக்காலத்தில், குற்றங்களை விசாரிக்கும் போது விசேட திறமைகளை வெளிப்படுத்திய தைரியமான அதிகாரி என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தனது இடமாற்றம் தொடர்பில் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு விடயங்களை முன்வைத்துள்ளார்.

லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கு, கீத் நொயார் மற்றும் உபாலி தென்னகோன் ஆகியோரை தாக்கியமை உள்ளிட்ட பல வழக்கு விசாரணைகளை குறித்த பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழுவினரே மேற்கொண்டுள்ளனர்.

அவருக்கு வழங்கிய இடமாற்றம் தொடர்பில் மீள கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி, லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

சர்வதேச ஊடகவியலாளர்களின் சம்மேளனம் இது தொடர்பில் கவனம் செலுத்தி அறிக்கையொன்றை அனுப்பியுள்ளது.

இந்த கடிதப் பரிமாற்றத்திற்கு இடையே, பொலிஸ் பரிசோதகரின் இடமாற்றத்தை இரத்து செய்ய பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்