பாராளுமன்றம் எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

by Chandrasekaram Chandravadani 19-11-2018 | 1:26 PM
Colombo (News 1st) பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 1 மணியளவில் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் ஆரம்பமான பாராளுமன்றம், மிகக் குறுகிய நேரத்தில் நிறைவுபெற்றுள்ளது. அத்தோடு, நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்க இதன்போது யோசனை முன்வைக்கப்பட்டது. அதனையடுத்து, பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் எதிர்வரும் 23அம் திகதி காலை 10.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இன்று காலை நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். அத்துடன், ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகளும் இன்று பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் ஈடுபட்டன. பிரதமரின் செயலாளருக்கு அரசநிதியைப் பயன்படுத்துவதற்கான அதிகாரமில்லை என தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சி, பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்த பிரேரணையை எதிர்வரும் 29 ஆம் திகதி விவாதிப்பதற்குக் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பாராளுமன்றத்தில் பொதுமக்கள் கெலரிக்கு செல்வதற்கு இன்று அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கடந்த வௌ்ளிக்கிழமை பொதுமக்கள் கெலரியில் இருந்த சிலர் செயற்பட்ட விதத்தை கருத்திற் கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் பாராளுமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார். அதனையடுத்து, பாராளுமன்ற கெலரியில் இன்று ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.