ஜனாதிபதி தலைமையில் சர்வ கட்சி சந்திப்பு

ஜனாதிபதி தலைமையில் சர்வ கட்சி சந்திப்பு

by Chandrasekaram Chandravadani 18-11-2018 | 11:23 AM
Colombo (News 1st) பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் பங்குபற்றுதலுடன், சர்வகட்சி சந்திப்பொன்று இன்று (18) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. பாராளுமன்றத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் குழப்பநிலையை முடிவுக்குக் கொண்டுவந்து, பாராளுமன்ற நடவடிக்கைகளை சுமூகமாக நடாத்தி செல்வதற்கு அனைத்து கட்சிகளுக்கிடையிலும் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதி இந்த சந்திப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், பாராளுமன்றத்தை பிரநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் , ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய கலந்துகொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பா.உ. கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார். அதேபோல், சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அத்துடன், கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் நியூஸ்பெஸ்ட்டுக்கு கூறியுள்ளார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளதாக எதிர்ககட்சி தலைவரின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. இன்றைய கூட்டத்தில் மக்கள விடுதலை முன்னணி கலந்து கொள்வதில்லை என கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்