ஐ.தே.க. பா. உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு

ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று

by Staff Writer 18-11-2018 | 1:23 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது. இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல கருத்து வௌியிடுகையில்,
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளதென்பதை மஹிந்த ராஜபக்ஸ நிரூபிக்க வேண்டும் என்பதே ஐக்கிய தேசிய முன்னணியின் ஒரே நிலைப்பாடாகும். பொதுத் தேர்தலில் அவருக்கு மக்கள் ஆணை கிடைக்கவில்லை. அவர் புதிதாக பிரதமர் பதவியை ஏற்றவர். பாராளுமன்றில் ஜனநாயகத்தைப் பேணும் நாடுகளில், புதிய பாராளுமன்றம் நியமிக்கப்படும்போது, அவருக்கு பெரும்பான்மை இருப்பதை நிரூபிக்க வேண்டும். பாராளுமன்றம் நாளை (19) கூடவுள்ளது. பிரேரணையொன்றை கொண்டுவந்து பெரும்பான்மை இருக்குமெனில், அதனை நிரூபிக்க வேண்டும். பாராளுமன்றத்தில் குழப்பநிலையை ஏற்படுத்த எமக்கு விருப்பமில்லை. பெரும்பான்மையை நிரூபியுங்கள், இரண்டு தடவைகளும் மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவாக 85 உறுப்பினர்களே வந்தனர். ஆகவே, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். பெரும்பான்மை இன்றி பிரேரரணையை வெற்றி கொள்ள முடியாதல்லவா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.