இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி

by Staff Writer 18-11-2018 | 5:10 PM
Colombo (News 1st) இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 57 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கண்டி, பல்லேகல மைதானத்தில் நடைபெற்றது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 290 ஓட்டங்களையும் இலங்கை அணி 336 ஓட்டங்களையும் பெற்றன. இரண்டாம் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 346 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. இதன்படி, 301 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, வெற்றி பெறுவதற்கு 75 ஓட்டங்களைப் பெறவேண்டிய நிலையில் இன்றைய ஆட்டத்தை ஆரம்பித்தது. எனினும், நிரோஷன் திக்வெல்ல 34 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, சுரங்க லக்மால் ஓட்டமெதுவும் இன்றி ஆட்டமிழந்தார். மலிந்த புஷ்பகுமார ஓர் ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 243 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. பந்துவீச்சில் ஜெக் லீச் 5 விக்கெட்களையும் மொயின் அலி 4 விக்கெட்களையும் கைப்பற்றினர். இதன்படி, 57 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. போட்டியின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்பட்டன. இதுபோன்ற மைதானங்களில் விளையாடும்போது இரண்டு தடவைகளும் இங்கிலாந்து அணியே நாணயசுழற்சியில் வெற்றிபெற்றது. நாங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளோம் என்பதை நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அணியில் காணப்படும் குறைகளை நிவர்த்திசெய்து கொள்வோமானால், வெற்றிபெற முடியும் என இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.