நீருக்காகப் போராடிய மொரவக்கந்த கிராமவாசிகளுக்கு மக்கள் சக்தியால் குடிநீர்த்திட்டம்

by Staff Writer 17-11-2018 | 9:24 PM
Colombo (News 1st) தாகத்தைத் தணிக்க ஒருதுளி நீருக்காக பல தசாப்தங்களாகப் போராடிய நொச்சியாகம - மொரவக்கந்த கிராம மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு இன்று தீர்வு கிட்டியது. பேராசிரியர் பெஸ்டர் வின்சன்ட் பிரீஸின் நிதியுதவியின் ஊடாக, மக்கள் சக்தி 1000 திட்டத்தின் கீழ் மொரவக்கந்த கிராமத்திற்கு இன்று குடிநீர் திட்டமொன்று வழங்கப்பட்டது. 250-க்கும் அதிக விவசாயக் குடும்பங்கள் பல தசாப்தங்களாக எதிர்நோக்கியிருந்த குடிநீர் நெருக்கடிக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் நோக்கில், மக்கள் சக்தி 1000 திட்டத்தின் கீழ் கடந்த ஜூலை 5 ஆம் திகதி இந்த குடிநீர்த் திட்டத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 4 மாதங்கள் என்ற குறுகிய காலத்திற்குள், மக்களின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட இந்த குடிநீர்த் திட்டம் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது. மொரவக்கந்த கிராமத்திலுள்ள 250-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இன்று முதல் குழாய் மூலம் அவர்களின் வீடுகளுக்கே நீர் கொண்டு செல்லப்படவுள்ளது.