கஜா சூறாவளி: உயிரிழப்பு எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் கஜா சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு

by Bella Dalima 17-11-2018 | 7:26 PM
தமிழகத்தில் கஜா சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது. அனர்த்தத்தில் சிக்கி 26 ஆண்களும் 17 பெண்களும் குழந்தைகள் மூவருமாக 46 பேர் உயிரிழந்துள்ளதாக அவசர கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. கஜா சூறாவளியினால் 451 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடற்பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாமென மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கஜா சூறாவளியைத் தொடர்ந்து அரபிக்கடலில் புதிதாக சூறாவளி உருவாக வாய்ப்புள்ளதால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் 18, 19 ஆம் திகதிகளிலும் தென்மேற்கு அரபிக்கடலில் 19, 20 ஆம் திகதிகளிலும் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, திண்டுக்கல், நத்தம், பழநி, கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பரவலாக அனைத்து சாலைகளிலும் ஆயிரக்கணக்கில் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.