அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணி 95 வீதம் பூர்த்தி

க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணி 95 வீதம் பூர்த்தி

by Staff Writer 17-11-2018 | 5:05 PM
Colombo (News 1st) இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளில் 95 வீதமானவர்களின் அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரை 3,95,000 அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்தார். இவற்றில் 3,92,000 அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். விநியோகிக்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளில் ஏதேனும் குறைபாடுகள் காணப்படுமாயின் அது தொடர்பில் அறியப்படுத்துமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுவரை அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளாத சாதாரண தர பரீட்சார்த்திகள் உடனடியாக உரிய ஆவணங்களை ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறு ஆணையாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இம்முறை தேசிய அடையாள அட்டைகளுக்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கடந்த வருடங்களைவிட அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பிக்கக்கூடிய ஆகக்குறைந்த வயதெல்லை 16 இலிருந்து 15 ஆகக் குறைக்கப்பட்டமையே இதற்கான காரணமாகும். இதேவேளை, இந்த வருடத்தில் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக தேசிய அடையாள அட்டைகளை விநியோகிப்பதற்கு தனியொரு தினத்தை ஒதுக்கப்போவதில்லை எனவும் ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்தார்.