மஹிந்த ராஜபக்ஸ உடனடியாக பதவி விலக வேண்டும்: இரா. சம்பந்தன் வலியுறுத்தல்

by Bella Dalima 16-11-2018 | 3:07 PM
Colombo (News 1st) பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது மஹிந்த ராஜபக்ஸவின் ஜனநாயகக் கடமை. இருப்பினும், பெரும்பான்மையை அவர் பாராளுமன்றத்தில் நிரூபிக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் குறிப்பிட்டார். பணம் வழங்கி பாராளுமன்ற உறுப்பினர்களை வாங்க பெருமுயற்சி இடம்பெற்ற விடயம் அனைவருக்கும் தெரியும். இருந்தும், அவர்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என இரா. சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.
கடந்த 14 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முதலில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர் மீது நம்பிக்கையில்லை என தெரிவித்து கையெழுத்திட்டு சபாநாயகரிடம் சமர்ப்பித்தனர். இலத்திரனியல் ஊடகம் மூலம் வாக்கெடுப்பு நடத்த மீண்டும் பாராளுமன்றம் கூடியது. ஆனால், மஹிந்த ராஜபக்ஸ தரப்பினர் பாராளுமன்றத்தில் குழப்பமேற்படுத்தி, சபாநாயகர் வருகையைக் குழப்பினார்கள். மூன்றாவது முறையாகவும் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமராகப் பதவி வகிக்க மஹிந்த ராஜபக்ஸவிற்கு உரிமை இல்லை. உடனடியாக அவர் பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் அவர் ஜனநாயக விரோதியாவார்.
என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மேலும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமளிதுமளியை அடுத்து மீண்டும் பாராளுமன்றம் எதிர்வரும் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளரின் கேள்விகளுக்கு பதிலளித்த போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் குறிப்பிட்டார்.  

ஏனைய செய்திகள்