மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டது: சபாநாயகர் அறிவிப்பு

by Bella Dalima 16-11-2018 | 6:25 PM
Colombo (News 1st) பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 122 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடனான குறித்த பிரேரணை அடங்கிய ஆவணம் சபாநாயகரினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்றைய பாராளுமன்ற அமர்வில் நம்பிக்கையில்லா பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், அதன் முதலாவது சரத்தில் அரசியலமைப்பு ரீதியில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சரவையை நீக்கி மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக நியமித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்டத்திற்கு முன் செல்லுபடியற்றது என முதலாவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று மாலை கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தார். மீண்டும் பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உறுப்பினர்களின் பெயரை அறிவித்து வாக்கெடுப்பை மேற்கொள்ளுமாறு கட்சிகளின் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி கூறியிருந்தார். பெரும்பான்மையை சட்டப்பூர்வமாக நிரூபித்தால் அரசியலமைப்பிற்கு அமைய நடவடிக்கை எடுப்பதாக கட்சிகளின் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.