பாராளுமன்றினுள் கூரிய ஆயுதங்கள்: விசாரணை ஆரம்பம்

பாராளுமன்றத்தினுள் கூரிய ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்டமை தொடர்பில் விசாரணை

by Staff Writer 16-11-2018 | 4:06 PM
Colombo (News 1st) பாராளுமன்றத்திற்கு கூரிய ஆயுதத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்டு சென்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாராளுமன்றத்தில் பொருத்தப்பட்டுள்ள கெமராக்களின் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பாதுகாப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று (15) இடம்பெற்ற மோதலின் போது இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் வசம் கூரிய ஆயுதங்கள் காணப்பட்டதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை இன்று முதல் பலப்படுத்தவுள்ளதாகவும் பாராளுமன்ற பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்திற்குள் எவ்வித ஆயுதத்தையும் எடுத்துச்செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரத்தியேக துப்பாக்கிகளையேனும் சபைக்குள் எடுத்துச்செல்ல முடியாது எனவும் பாராளுமன்றத்தின் உயர் அதிகாரி ஒருவர் நியூஸ்ஃபெஸ்டிற்குத் தெரிவித்தார்.