நாட்டின் இருப்பு வெகு விரைவில் வீழ்ச்சியடையும்

நாட்டின் இருப்பு வெகு விரைவில் வீழ்ச்சியடையும்: மல்வத்து மகாநாயக்கர் ஜனாதிபதிக்கு கடிதம்

by Staff Writer 16-11-2018 | 3:48 PM
Colombo (News 1st) தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்ப்பது என்ற தலைப்பில் மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரர் , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அண்மையில் புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டமை, புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஆளும் , எதிர்க்கட்சிகள், பல்வேறு அரசியல் கருத்துக்களை கொண்டுள்ள குழுக்கள், நாட்டு மக்கள், உள்நாட்டு - சர்வதேச சமூகத்தினர் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றமையைக் காணக்கூடியதாக உள்ளதென அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம், சமூகம், அரசியல் போன்றவை நாளுக்கு நாள் சீர்குலைவதன் காரணமாக நாட்டின் இருப்பு வெகு விரைவில் வீழ்ச்சியடையும் என்பது தௌிவான உண்மை என மகாநாயக்கர் தெரிவித்துள்ளார். அத்துடன் அரச நிறுவனங்கள், அலுவலகங்கள், திணைக்களங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களின் செயற்பாடுகள் போன்று, பொதுமக்களின் வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் அரச கட்டமைப்பு முற்றுமுழுதாக செயலிழந்துள்ளதாகவும் மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். அத்தகைய பின்புலத்தில், நாட்டின் முதற்பிரஜை என்ற வகையில் அரசியல் ரீதியில் தூய்மையை பாதுகாத்து, பொறுப்புகளை உரிய முறையில் நடத்தி செல்ல வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு உள்ளதாக மகாநாயக்க தேரர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற சம்பிரதாயம் மற்றும் அரசியலமைப்பின் பிரகாரம், அரசியல் ஒழுக்கத்தை பாதுகாத்து, எதிர்கால அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதனூடாக, நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியை நிவர்த்தி செய்து மக்களுக்கு சுபீட்சத்தை ஏற்படுத்தி, நிலையான நாட்டை உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறும் மகாநாயக்க தேரர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார். நிலவும் நெருக்கடி நிலையில் ஜனாதிபதி தலையிட்டு பாராளுமன்றத்தை கூட்டி இது தொடர்பில் உடனடி தீர்வு காண்பது மிகவும் உகந்தது எனவும் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார். அதன்மூலம் அரசியல் அமைப்பிற்கு அமையவும், அரசியல் ஒழுக்கத்தை பாதுகாத்து உரிய நடவடிக்கையை எடுக்கவும் முடியும் என நம்புவதாகவும் மகாநாயக்க தேரர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி ஏற்படுவதைத் தவிர்த்து, பொதுமக்களின் சுபீட்சம் மற்றும் ஒழுக்கத்தையும், நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பாதுகாக்க முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.