போக்குவரத்து கட்டணத்தைக் குறைக்கும் தீர்மானமில்லை

எரிபொருள் விலை குறைப்பு: போக்குவரத்துக் கட்டணத்தைக் குறைக்கும் தீர்மானமில்லை 

by Staff Writer 16-11-2018 | 4:18 PM
Colombo (News 1st) எரிபொருள் விலை குறைவடைந்தமைக்கு ஏற்ப போக்குவரத்துக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு எந்தவொரு சங்கமும் இதுவரை தீர்மானிக்கவில்லை. பஸ் சங்கங்கள் மற்றும் முச்சக்கரவண்டி சங்கங்களின் தீர்மானம் தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. 5 ரூபாவினால் டீசல் விலை குறைக்கப்பட்டாலும், பஸ் கட்டணத்தை குறைக்க இயலாது என இலங்கை தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் இன்று கூடவுள்ள நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும் என அகில இலங்கை பஸ் சங்கங்களின் சம்மேளனத்தின் பிரதான செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் கூறினார். பஸ் கட்டணத் திருத்தம் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி. ஹேமச்சந்திர குறிப்பிட்டார். பஸ் சங்கங்களின் வேண்டுகோளுக்கு அமைய, கட்டண திருத்தம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். கட்டணத் திருத்தம் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை தீர்மானம் எடுக்கப்படும் என ஒன்றிணைந்த முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் குறிப்பிட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சபையில் நேற்று அளித்த வாக்குறுதிக்கு அமைய பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நேற்று (15) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.