மோதலில் முடிவடைந்த பாராளுமன்ற அமர்வு: நாளை மீண்டும் கூடத் தீர்மானம்

by Bella Dalima 15-11-2018 | 8:51 PM
Colombo (News 1st) இன்றைய பாராளுமன்ற அமர்வும் மோதலில் முடிவடைந்தது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் விசேட உரையின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சி அது தொடர்பான வாக்கெடுப்பைக் கோரிய சந்தர்ப்பத்தில் அமளி துமளி ஏற்பட்டது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. எனினும், பாராளுமன்றத்தில் சச்சரவுகள் வலுத்தன. இதனையடுத்து ஏற்பட்ட மோதலில் காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டதுடன், அமர்வு ஒத்திவைக்கப்பட்டதன் பின்னரும் நீண்ட நேரம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் கூடியிருந்தனர். சபையை ஒத்திவைத்து வெளியேறிய சபாநாயகர் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நடத்தியதுடன், இதன்போது நாளை (16) பிற்பகல் 1.30 மணிக்கு பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.