மெலனியாவுடன் மோதல்: மிரா ரிக்கார்டெல் பதவி நீக்கம்

மெலனியாவுடன் மோதல்: தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் பதவி நீக்கம்

by Bella Dalima 15-11-2018 | 4:28 PM
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் மனைவி மெலனியாவுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்த தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகரை வெள்ளை மாளிகை பதவி நீக்கம் செய்துள்ளது. அமெரிக்க அதிபராக முன்னர் பராக் ஒபாமா பதவி வகித்தபோது அந்நாட்டின் வெளியுறவுத்துறைக்கான ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்த மிரா ரிக்கார்டெல் அமெரிக்க அதிபரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜான் போல்ட்டன் என்பவருக்கு உதவியாக தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக கடந்த மே மாதம் நியமிக்கப்பட்டார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் மனைவி மெலனியா ட்ரம்ப் கடந்த மாதம் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தபோது மெலனியாவின் உதவியாளர்களுக்கும் மிரா ரிக்கார்டெலுக்கும் இடையில் சச்சரவு ஏற்பட்டதாகத் தெரிகிறது. தேசிய பாதுகாப்பு தலைமை ஆலோசகர் ஜான் போல்ட்டனிடம் தனக்குள்ள நெருக்கம் மற்றும் செல்வாக்கால் மிரா ரிக்கார்டெல் வரம்புமீறி நடந்துகொள்வதாகக் கருதிய மெலனியா ஆத்திரமடைந்தார். இதனையடுத்து, இதுதொடர்பாக அவரது அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் ‘இந்த வெள்ளை மாளிகையில் தொடர்ந்து பணியாற்றும் கௌரவத்தை மிரா ரெக்கார்டல் இழந்து விட்டார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மிரா ரெக்கார்டல் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக அதிபரின் வெள்ளை மாளிகை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.