கொழும்பு – லிப்டன் சுற்றுவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணி பேரணி

கொழும்பு – லிப்டன் சுற்றுவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணி பேரணி

கொழும்பு – லிப்டன் சுற்றுவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணி பேரணி

எழுத்தாளர் Bella Dalima

15 Nov, 2018 | 4:13 pm

Colombo (News 1st) ஐக்கிய தேசிய முன்னணியின் பேரணி கொழும்பு – லிப்டன் சுற்றுவட்டத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது.

கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பேரணியில் உரையாற்றுகையில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் என கூறினார்.

கட்சிகளுடன் கலந்துரையாடி ஜனநாயக முறைப்படி பொதுத்தேர்தலுக்கு செல்லத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பேரணியில் உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடு தற்போது சர்வாதிகாரப் போக்கில் பயணிப்பதாகத் தெரிவித்தார்.

எனினும், சுயாதீன நீதித்துறையும் துணிச்சலான சபாநாயகரும் இருப்பதால் ஜனநாயகம் பாதுகாக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை மாற்றி ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கு வீதியில் உயிரைத் தியாகம் செய்யவும் தயார் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நேற்று முன்தினமும் நேற்றும் இன்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி உறுதி செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

முடியுமாயின் நாளைய தினம் பாராளுமன்றத்திற்குள் வாக்கெடுப்பொன்றை எதிர்நோக்குமாறு ஆளும் தரப்பிற்கு சஜித் பிரேமதாச சவால் விடுத்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக அபிவிருத்தித் திட்டங்கள் தடைப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமது தீர்மானம் என்னவென பல்வேறு தரப்பினரும் தற்போது கேள்வியெழுப்புவதாகவும் கட்சி எடுக்கின்ற தீர்மானத்திற்கு கட்டுப்பட்டு நாட்டின் பாமர மக்களுக்காக எந்தவொரு சவாலையும் ஏற்பதற்குத் தாம் தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.

பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அரசாங்கம் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு தயாரானாலும் நாடு முழுவதும் தமது பலத்தை நிரூபிப்பதற்கு ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடத்திப்பார்க்குமாறு சவால் விடுத்துள்ளார்.

லிப்டன் சுற்றுவட்டத்தில் இன்று நடைபெற்ற பேரணியில் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் பெருந்திரளான ஆதரவாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்