மஹிந்த ராஜபக்ஸவிடம் ஒழுக்கம் எஞ்சியிருக்குமாயின் நேர்மையாக இராஜினாமா செய்ய வேண்டும் - அனுரகுமார திசாநாயக்க

by Bella Dalima 14-11-2018 | 9:02 PM
Colombo (News 1st) மஹிந்த ராஜபக்ஸவின் அரசியல் வரலாற்றில் பரிதாபகரமான சந்தர்ப்பத்தை இன்று தாம் பாராளுமன்றத்தில் கண்டதாகவும் அவரிடம் ஓரளவுக்கேனும் ஒழுக்கம் எஞ்சியிருக்குமாயின், நேர்மையாக இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்சினைக்கு நாட்டு மக்கள் பொறுப்புக்கூற வேண்டுமா எனவும் அனுரகுமார திசாநாயக்க கேள்வி எழுப்பினார். குறித்த இருவரையும் ஓர் அறையில் அடைத்து வைத்துவிட வேண்டும் என குறிப்பிட்ட அனுரகுமார, இருவரும் கடித்துக்கொண்டோ கட்டியணைத்துக்கொண்டோ பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என கூறினார். இருவரையும் ஒரு அறையில் அடைத்து கதவை பூட்ட வேண்டும். ஒன்றோ கடித்துக்கொண்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும் இல்லாவிட்டால், கட்டியணைத்துக்கொண்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும்.
இன்று எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் ஒருபோதும் செல்லுபடியற்றதாகாது. ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட வர்த்தமானிக்கமையவே இன்று பாராளுமன்றம் கூடியது. ரணில் விக்ரமசிங்க பிரதமர் என இன்று பாராளுமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. இந்த அரசாங்கம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அமைச்சரவை மீது நம்பிக்கையில்லை என்ற பிரேரணையே இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதற்கே நாம் ஆதரவளித்தோம்.
என அவர் மேலும் கூறினார். மக்கள் விடுதலை முன்னணி இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே அனுரகுமார இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.