ஜனாதிபதி சபாநாயகருக்கு பதில் கடிதம்

பெரும்பான்மையைக் காண்பிப்பதற்கான தேவை பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அவசியமற்றது: ஜனாதிபதி சபாநாயகருக்கு கடிதம்

by Bella Dalima 14-11-2018 | 10:59 PM
Colombo (News 1st) பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் சட்ட நடவடிக்கை இடம்பெறுகின்ற சந்தர்ப்பத்தில் சபாநாயகர் எடுத்துள்ள நடவடிக்கை, அந்த வழக்கு விசாரணைக்கு இழுக்கு ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பிலான கடிதம் தனக்கு கிடைத்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை முன்வைக்க வேண்டிய விதம் மற்றும் அதனை நிறைவேற்றுவதற்கு பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் அரசியலமைப்பு மற்றும் நிலையியற்கட்டளைகளில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அரசியலமைப்பு, நிலையியற்கட்டளை மற்றும் பாராளுமன்ற சம்பிரதாயங்களைப் பொருட்படுத்தாது சபாநாயகர் செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் நம்பிக்கைக்குரிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பிரதமராக நியமிப்பதற்கு, அரசியலமைப்பில் ஏற்பாடுகள் காணப்படுகின்ற போதிலும் பிரதமருக்கோ அரசாங்கத்திற்கோ பெரும்பான்மை காணப்படுகின்றதா, இல்லையா என்பதைக் காண்பிப்பதற்கான தேவை பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய அவசியமற்றது என சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டுவருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தினால் உரிய வகையில் உறுதிப்படுத்தப்படாது கையெழுத்திடப்பட்ட ஆவணமொன்றை தமக்கு அனுப்பி வைத்து குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக உறுதி செய்ய சபாநாயகர் எடுத்த முயற்சி தொடர்பில் தாம் கவலையடைவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.