காட்போர்ட் அமைச்சரவைக்கு எவ்வித அதிகாரமும் இல்லை - ரணில் விக்ரமசிங்க

by Bella Dalima 14-11-2018 | 10:15 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் இன்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டனர். ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனும் கலந்து கொண்டு கருத்து வௌியிட்டிருந்தார். இதன்போது, காட்போர்ட் அமைச்சரவைக்கு எவ்வித அதிகாரமும் இல்லை எனவும் சபாநாயகரின் இன்றைய தீர்மானம் தவறு என எவரேனும் கூறுவார்கள் எனின், நாளை பிரேரணையொன்றை சமர்ப்பிக்க முடியும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். அரசியல் சாசனத்தை மதிக்கவும் அதனைப் பின்பற்றவும் அனைவரும் உழைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார். நாட்டில் நெருக்கடி நிலையை ஏற்படுத்தாது கௌரவத்துடன் அரசாங்கத்தை தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார். இதேவேளை, ஜனாதிபதி கடந்த 26 ஆம் திகதி செய்த மோசமான வேலையை மீண்டும் செய்ய மாட்டார் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.