இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றவை

by Bella Dalima 14-11-2018 | 9:29 PM
Colombo (News 1st) பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கான வர்த்தமானி அறிவித்தலுக்கு நேற்று (13) உயர் நீதிமன்றத்தினால் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, இன்று பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு தீர்மானித்த சபாநாயகர், இன்று காலை 8.30-க்கு பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் கட்சித் தலைவர்களை சந்தித்தார். இன்றைய நாளுக்கான ஒழுங்கு பத்திரத்தைத் தயாரிக்கும் பொறுப்பை சபைக்கு வழங்குவதற்கு கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளும், பல வௌிநாட்டுத் தூதுவர்களும் இன்று பாராளுமன்றத்திற்கு வருகை தந்து நிலைமையை அவதானித்தனர். பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகும் முன்னர் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் விஜித்த ஹேரத்தின் கையொப்பத்துடன் புதிய பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. காலை 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமானதுடன், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்கள் கறுப்புப் பட்டி அணிந்து சபைக்கு வந்திருந்தனர். சபாநாயகரின் தலைமையில் சபை அமர்வு ஆரம்பமான பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்பிக்க தசாநாயக்க ஜனாதிபதியின் உரையை சபையில் சமர்ப்பித்தார். கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைய, நிலையியல் கட்டளையை இரத்து செய்து பாராளுமன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான பிரேரணையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாரராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் முன்வைத்தார். பின்னர் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் சபையின் நிலைப்பாட்டை அறிய வேண்டும் என அனுரகுமார திசாநாயக்க கேட்டுக்கொண்டார். கடும் அமளி துமளிக்கு மத்தியில் ஆளுங்கட்சி உறுப்பினர்களான மனுஷ நாணயக்கார, பியசேன கமகே மற்றும் ஏ.எச்.எம். பௌசி ஆகியோர் எதிர்த்தரப்பில் அமர்ந்து கொண்டனர். அதன் பின்னர், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் இருந்து வௌியே வந்தனர். இதேவேளை, பாராளுமன்ற அமர்வின் பின்னர் 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட பிரேரணையொன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதிவியில் இருந்து நீக்கி, அமைச்சரவையைக் கலைத்து , மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக நியமிக்கும் வகையில் ஜனாதிபதி வௌியிட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் சட்டத்தின் முன் அது செல்லுபடியாகாது எனவும் இந்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் மஹிந்த ராஜபக்ஸ அல்லது அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லையென இந்த பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 122 பேர் கையொப்பமிட்ட இந்தப் பிரேரணையின் பிரதி அடுத்த கட்ட செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சபாநாயகர் அலுவலகம் இன்று மதியம் வௌியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.   சபை ஒத்திவைப்பின் பின்னர் ஐ.ம.சு.கூட்டமைப்பு ஊடகவியலாளர்களை சந்தித்தனர்
  ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இன்று ஆதரவு தெரிவித்தனர்