இலங்கை ஒரு விக்கெட் இழப்பிற்கு 26 ஓட்டங்கள்

இங்கிலாந்திற்கு எதிரான 2 ஆவது டெஸ்ட்: இலங்கை ஒரு விக்கெட் இழப்பிற்கு 26 ஓட்டங்கள்

by Staff Writer 14-11-2018 | 7:06 PM
Colombo (News 1st) இங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை சற்று பின்தங்கியுள்ளது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 285 ஓட்டங்களைப் பெற்றதுடன், பதிலளித்தாடும் இலங்கை ஒரு விக்கெட் இழப்பிற்கு 26 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது இன்றைய முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் இன்று ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து ஆரம்பத்தில் இலங்கை வீரர்களின் பந்து வீச்சில் தடுமாறியது. பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், மொயின் அலி, பென் போக்ஸ் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 171 ஓட்டங்களுக்கு ஏழாவது விக்கெட்டை இழந்தது. ரொரி பேர்ன்ஸ் 43 ஓட்டங்களையும் ஜோஸ் பட்லர் 63 ஓட்டங்களையும் பெற்றனர். இறுதி நேரத்தில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஷாம் கரன் கடைசி விக்கெட்டில் ஜேம்ஸ் அண்டர்சனுடன் இணைந்து 60 ஓட்டங்கள் பகிரப்படக் காரணமானார். 6 சிக்ஸர்களை விளாசிய ஷாம் கரன் 64 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் 285 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது. பந்து வீச்சில் டில்ருவன் பெரேரா 4 விக்கெட்களையும் மலிந்த புஷ்பகுமார 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். பதிலளித்தாடும் இலங்கை அணி 22 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கௌஷால் சில்வா 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.