அரச வாகனம், வாசஸ்தலங்களை மீள ஒப்படைக்க வேண்டும்

முன்னாள் அமைச்சர்களின் அரச வாகனம், வாசஸ்தலங்களை மீள ஒப்படைக்க வேண்டும் - பொது நிர்வாக மற்றும் உள்நாட்டுலுவல்கள் அமைச்சு

by Staff Writer 13-11-2018 | 10:11 AM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து அரச வாகனங்கள் மற்றும் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் உடனடியாக மீள ஒப்படைக்க வேண்டும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டுலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தந்த அமைச்சுக்களின் செயலாளர்கள் ஊடாக, அமைச்சர்கள், பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு எழுத்துமூலம் அறிவிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி குறிப்பிட்டுள்ளார். இதன்படி, அரச வாகனங்கள், உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் ஆகியவற்றை அமைச்சுக்களின் செயலாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அவர் கூறினார். அவ்வாறு அரச வாகனங்கள், உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பொது நிர்வாக மற்றும் உள்நாட்டுலுவல்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதேநேரம், முன்னாள் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் அவர்களின் நிர்வாகிகளுக்கும் 8 வாகனங்கள் வீதம் வழங்கப்பட்டதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.