மாணவர்களை பரீட்சைக்கு அனுப்பாத பாடசாலைகள்

மாணவர்களை பரீட்சைக்கு அனுப்பாத பாடசாலைகள்: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

by Staff Writer 13-11-2018 | 9:15 PM
Colombo (News 1st) மத்திய மாகாண பாடசாலைகளில் மாணவர்கள் சிலரை பரீட்சைக்குத் தோற்றவிடாமல் செய்யும் நடவடிக்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மத்திய மாகாணத்தின் பல பாடசாலைகளில் மாணவர்களை பரீட்சைக்கு தோற்றவிடாமல் செய்வதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டி இருந்தது. இந்த விடயம் தொடர்பில் கடந்த வாரம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கலந்துரையாடப்பட்டதுடன், இன்றும் அதற்காக அழைக்கப்பட்டிருந்தனர். புலமைப்பரிசில் பரீட்சை, சாதாரண தரப்பரீட்சை, உயர்தரப் பரீட்சையில் பாடசாலைகளின் பெறுபேறுகளை அதிகரிப்பதற்காக பாடசாலை அதிபரோ, ஆசிரியரோ சில மாணவர்கள் பரீட்சையில் தோற்றினால் சித்தி பெற மாட்டார்கள் என தீர்மானித்து அம்மாணவர்களை பரீட்சைக்கு அனுப்பாத சூழ்நிலை உள்ளது. இது பெருந்தோட்டப் பகுதியில் பிரபல்யமாக இருக்கின்றது. இது மாணவர்களுக்கு செய்கின்ற பாரிய அநீதி என இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார். இது மனித உரிமையை மீறும் செயற்பாடு என சுட்டிக்காட்டிய ஜோசப் ஸ்டாலின், இது குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், இது தொடர்பான விசாரணைகளுக்கு இன்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர் வருகை தந்திருக்கவில்லை.