அரசியல் சூழ்நிலையை இடையூறாகக் கருதாமல் திட்டமிட்டு செயற்படுமாறு ஜனாதிபதி ஆலோசனை

by Staff Writer 13-11-2018 | 9:09 PM
Colombo (News 1st) மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் காணி ஆணையாளர் நாயகத் திணைக்களம் ஆகியவற்றின் செயற்பாடுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் கண்காணித்தார். மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உள்ளக செயற்பாடுகள் மற்றும் நிதிப்பிரிவின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி இங்கு ஆராய்ந்தார். தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையை இடையூறாகக் கருதாமல், வருடாந்த இலக்கை பூர்த்தி செய்வதற்கு திட்டமிட்டு செயற்படுமாறு இதன்போது ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரத்தை விநியோகிக்கும் நடைமுறை உள்ளிட்ட சேவைகள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காணி அமைச்சிற்கு சென்ற ஜனாதிபதி அதன் செயற்பாடுகள் தொடர்பிலும் ஆராய்ந்தார். காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்தின், நில மானிய அனுமதிப்பத்திரம் வழங்கும் செயற்பாடு தொடர்பில் ஜனாதிபதி ஆராய்ந்து பார்த்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. நில மானிய அனுமதிப்பத்திரம் வழங்கும் செயற்பாட்டை நேர்த்தியாகவும் துரிதமாகவும் முன்னெடுக்கும் தேவை தொடர்பில் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு தெளிவூட்டியுள்ளார். அத்துடன், 2019 ஆம் ஆண்டு 10 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் தேசியத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக திட்டமிட்டு செயற்படுவதன் தேவையையும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.