நாட்டு மக்களுக்கான ஜனாதிபதியின் விசேட உரை

நாட்டு மக்களுக்கான ஜனாதிபதியின் விசேட உரை

by Staff Writer 12-11-2018 | 7:26 AM
Colombo (News 1st) தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையின் உறுப்பினர்களைத் தவிர முன்னாள் அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கத்தில் எவருக்கும் அரச சொத்துக்களைப் பயன்படுத்த முடியாது எனவும் அவ்வாறு பயன்படுத்தினால் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பேரம்பேசல் 500 மில்லியன் ரூபா வரை அதிகரித்தனர். இதுவே பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு பிரதான காரணமாக அமைந்தது. அத்தோடு, சபாநாயகரின் செயற்பாடுகள் தொடர்பில் நான் கவலையடைகின்றேன். 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின்படி இடைக்கால அரசாங்கம் காணப்படும் இத்தருணத்தில் அடுத்த பாராளுமன்றம் கூட்டப்படும் வரை அமைச்சரவை, பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் அமைச்சரவையில் இருப்பார்கள். ஏனைய முன்னாள் பிரதி அமைச்சர்கள், முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வாகனங்கள் உள்ளிட்ட அரச உடைமைகளைப் பயன்படுத்துவது தேர்தல் சட்டத்திற்கு விரோதமானது. முன்னாள் அமைச்சர்களிடம் காணப்படும் அரச வாகனங்கள் மற்றும் சொத்துக்களை அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு ஒப்படைக்கவும். அவ்வாறு செய்வதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் பொலிஸாரை ஈடுபடுத்தி அதனை மீண்டும் பெற்றுக்கொள்ள நேரிடும். அவர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் தராதிரம் பாராது சட்டத்தை நடைமுறைப்படுத்தப்படும். ஆகவே, தேர்தலை உரிய முறையில் நடாத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அரச அதிகாரிகள் பொலிஸார் மற்றும் முப்படையினருக்கு தனது முழு ஆதரவினையும் வழங்குகின்றேன். தேர்தல் காலத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தாமல் சமாதானத்துடன் நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்
என ஜனாதிபதி தனது உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஏனைய செய்திகள்