BREAKING NEW: சட்​டமா அதிபரின் விளக்கம் நாளை

சட்டமா அதிபரின் விளக்கம் நாளை முற்பகல் 10 மணிக்கு

by Staff Writer 12-11-2018 | 5:35 PM

பாராளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானியை இரத்து செய்யுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுக்கள் மீதான இன்றைய நாளுக்குரிய விசாரணையை பிரதம நீதியரசர்கள் குழாம் நிறைவுசெய்துள்ளது.

இந்த விடயம் தொடர்பிலான சட்டமா அதிபரின் விளக்கம் நாளை முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் 11 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் இரத்னஜீவன் ஹூல் மற்றும் சில அரசியற் கட்சிகளும் மேலும் சில குழுக்களும் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சர் கபீர் ஹாசிம் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் உயர்நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்யதுள்ளார். ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் மனு தாக்கல் செய்துள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியூதின் மனு தாக்கல் செய்துள்ளதுடன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேஷனும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார். அநுரகுமார திசாநாயக்க மக்கள் விடுதலை முன்னணி சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுவினை தாக்கல் செய்துள்ளார். இவர்களை தவிர, லால் விஜேநாயக்க, சட்டத்தரணி அநுர லக்சிறி, ஜீ.சி.டி பெரேரா, ஆர்.ஏ.எஸ்.பி.பெரேரா மற்றும் மாற்றுக் கொள்கைக்கான கேந்தர நிலையத்தினால் மேலும் ஐந்து மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டார்.