பாராளுமன்றம் கலைப்பு: நீதிமன்றத்தை நாடவுள்ளதாக ஐதேக, மக்கள் விடுதலை முன்னணி தெரிவிப்பு

by Bella Dalima 10-11-2018 | 8:47 PM
Colombo (News 1st) தேர்தல் தொடர்பில் அச்சமடையப்போவதில்லை என்ற போதிலும், பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் அறிவித்துள்ளன. அரசியலமைப்பை காலால் உதைத்து, பாராளுமன்றத் தேர்தலை நடத்தவுள்ளமையை தாம் எதிர்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார். நாளை மறுதினம் (12) நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் தமக்கு பெரும்பான்மை உள்ளமையை நிரூபிக்கத் தயாராக இருப்பதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டார். அரசியலமைப்பிற்கு விரோதமான முறையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவதற்கு மக்கள் விடுதலை முன்னணி எதிர்பார்த்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கூறினார்.