ஜெயலலிதாவின் உண்மையான பெயர் கோமளவள்ளி அல்ல

ஜெயலலிதாவின் உண்மையான பெயர் கோமளவள்ளி அல்ல: தீபா

by Bella Dalima 10-11-2018 | 5:07 PM
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் ஜெயலலிதாவின் உண்மையான பெயர் கோமளவள்ளி அல்ல என கூறியுள்ளார். விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சர்கார்’ படத்தில் வில்லி வேடத்தில் வரலட்சுமி நடித்துள்ளார். அவருக்கு கோமளவள்ளி என்று பெயர் வைத்திருந்தனர். இதற்கு அ.தி.மு.கவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். கோமளவள்ளி என்பது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இயற்பெயர். எனவே அதை நீக்க வேண்டும் என்று கூறினர். சில அமைச்சர்களும் இதே கருத்தை தெரிவித்தனர். அ.தி.மு.க.வினர் நடத்திய போராட்டத்திற்கு இதுவும் ஒரு காரணமாகக் கூறப்பட்டது. இதுபற்றி கருத்து தெரிவித்த டி.டி.வி. தினகரன், ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவள்ளி அல்ல. இதுபற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் ஜெயலலிதா கூறும்போது, ‘‘ஏன் எனது பெயர் கோமளவள்ளி என்று சொல்லி பிரச்சினை ஆக்குகிறார்கள்? எனது உண்மையான பெயர் அது அல்ல. இந்த பெயர் கொண்ட வேடத்திலும் நடிக்கவில்லை’’ என்று தெரிவித்தார், என சமீபத்தில் கூறினார். இந்த நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் ஜெயலலிதாவின் உண்மையாக பெயர் கோமளவள்ளி அல்ல என்று கூறியுள்ளார். ஜெயலலிதா பற்றி எனது தந்தைக்கு தான் நன்றாகத் தெரியும். அவர் அம்மு என்று செல்லப்பெயரில் தான் அழைப்பார். மைசூரில் பிறந்த அவருக்கு ஜெயா என்றுதான் பெயர் சூட்டினார்கள், என தீபா கூறியுள்ளார். ஜெயலலிதாவின் தாயார் இயற்பெயர் வேதவல்லி. அவர் சந்தியா என்ற பெயரில் சினிமாவில் நடித்தார்.