by Staff Writer 10-11-2018 | 7:03 PM
Colombo (News 1st) நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 49,000-இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மழை வௌ்ளம் மற்றும் சிறியளவிலான மண்சரிவுகளால் சுமார் 300 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆரம்பகட்ட நிவாரணமாக 10,000 ரூபா நிதியுதவி வழங்கப்படுவதாக அவர் கூறினார்.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் மட்டக்களப்பு மாவட்டம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 20,000-ற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு - ஏறாவூர்ப்பற்று, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஐயங்கேணி, ரமேஸ்புரம், கணபதிப்பிள்ளை கிராமம், ஏறாவூர் - நான்காம் குறிச்சி, ஏறாவூர் - எல்லை நகர், ஏறாவூர் - மிச் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வௌ்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏறாவூர் நான்காம் குறிச்சி கிராமத்தின் 22 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 80 பேர், ஏறாவூர் - மாஞ்சோலை மணிமண்டபத்தில் நேற்றிரவு முதல் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு - வௌ்ளாவௌி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில், பாதிக்கப்பட்ட 258 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்தும் தற்காலிக முகாமொன்றிலேயே தங்கியுள்ளனர்.
பெரிய போரைத்தீவு, கோயில் போரைத்தீவு, முனைத்தீவு, தட்டாபுரம் ஆகிய நான்கு கிராமங்களைச் சேர்ந்த மக்களே இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பெரிய போரைத்தீவு காளி கோவில் அன்னதான மடத்தில் கடந்த மூன்று நாட்களாக இவர்கள் தங்கியுள்ளதுடன், இவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்படுகின்றது.
சீரற்ற வானிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் தாழ்நிலப்பகுதிகள் மற்றும் வயல் நிலங்கள் தொடர்ந்தும் வௌ்ள நீரில் மூழ்கியுள்ளன.
மட்டக்களப்பு - வெருகல் - முத்துச்சேனை பகுதியில் ஆற்றை கடக்க முற்பட்ட இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் நேர்ந்த இந்த அனர்த்தத்தில் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளதுடன், ஒருவர் காணாமற்போயுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் கூறினார்.
வாகரை - கண்டலடி பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான தனபாலசிங்கம் கதீஸ்வரன் என்ற 30 வயது நபரே இவ்வாறு காணாமற்போயுள்ளார்.
திருகோணமலை - கிண்ணியா - சோழவெட்டுவான், காரவெட்டுவான், மைலப்பன்சேனை ஆகிய கிராமங்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த கிராமங்களுக்கு செல்வதற்கான மைலப்பன்சேனை வீதி நீரில் மூழ்கியுள்ளதுடன், வீதியிலுள்ள சிறிய பாலமும் மூழ்கியுள்ளது.
இதனால் குறித்த கிராமங்களைச் சேர்ந்த சுமார் 106 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கிண்ணியா பிரதேச செயலகத்தின் ஊடாக மக்களின் போக்குவரத்திற்காக இரண்டு வள்ளங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.