இலங்கை - ரஷ்யா இடையிலான இடையூறுகள் நீங்கும்: தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக்க

by Bella Dalima 09-11-2018 | 9:43 PM
Colombo (News 1st) தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்துடன் இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்பில் காணப்பட்ட இடையூறுகள் நீங்கும் என ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தி, விரைவில் பல்வேறு உடன்படிக்கைகளை கைச்சாத்திடும் வாய்ப்பு கிட்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் மாத்திரமின்றி வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையின் உள்ளக விவகாரங்களில் ரஷ்யா தலையீடு செய்து, எவ்வாறான விடயங்களை முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்காத நாடு என்ற ரீதியில், நன்றியுணர்வுடன் இலங்கையர் நினைவுகூர்வதாக ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்தார். ரஷ்யாவின் அரச அதிகாரிகள் சிலரை சந்தித்த போதே அவர் இதனைக் கூறினார். உலகின் ஏனைய நாடுகளும் பொதுமக்களின் வாக்குகளால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளின் கருத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவர் கேட்டுக்கொண்டார். நாட்டின் அதிகபட்ச மக்கள் ஆணையைப்பெற்ற பிரதிநிதியாக, முழு நாட்டு மக்களின் வாக்குகளால் நிறைவேற்று ஜனாதிபதி நியமிக்கப்படுவதுடன், அது 50 வீதத்திற்கு அதிக வாக்கு வீதம் என்பதை அவர்கள் மறந்துள்ளதாகவும் இலங்கை தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக்க மேலும் கூறினார்.