முல்லைத்தீவு நித்தகைக்குளம் உடைப்பெடுத்தது: வௌ்ளத்தில் சிக்குண்ட அறுவர் விமானப்படை ஹெலிகொப்டர் மூலம் மீட்பு

by Bella Dalima 09-11-2018 | 4:11 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு - நித்தகைக்குளம் உடைப்பெடுத்தமையால் வௌ்ளத்தில் சிக்குண்ட 6 பேர் விமானப்படையின் ஹெலிகொப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் முல்லைத்தீவிலுள்ள குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. பலத்த மழை காரணமாக குமிழமுனைக்கு அண்மித்துள்ள நித்தகைக்குளம் உடைப்பெடுத்துள்ளது. இதனால் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு காரணமாக, விசேட தேவையுடைய ஒருவர் உள்ளிட்ட 6 பேர் அப்பகுதியிலிருந்து வௌியேற முடியாத நிலையில் 2 நாட்களாக தங்கியிருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து இன்று காலை விமானப்படையின் ஹெலிகொப்டர் மூலம் 6 பேரும் மீட்கப்பட்டு இடர் முகாமைத்துவப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மருத்துவப் பரிசோதனைகளுக்காக 6 பேரும் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார். குளம் உடைப்பெடுத்தமையால் ஏற்பட்ட வௌ்ளநீர், நாயாற்றின் ஊடாகக் கடலுக்கு அனுப்பப்படுகின்றது. அத்துடன், குமிழமுனை பகுதியிலுள்ள 700 ஏக்கர் விவசாய நிலத்திற்கு செல்லும் வீதியும் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது.