சீரற்ற வானிலையால் மூவர் உயிரிழப்பு: வடக்கு, கிழக்கில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சீரற்ற வானிலையால் மூவர் உயிரிழப்பு: வடக்கு, கிழக்கில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

09 Nov, 2018 | 8:27 pm

Colombo (News 1st) நாட்டில் நிலவும் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

13 மாவட்டங்களைச் சேர்ந்த 27,949 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக இடம்பெயர்ந்த 2000-ற்கும் அதிகமானோர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார்.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – நித்தகைக்குளம் உடைப்பெடுத்தமையால், வௌ்ளத்தில் சிக்குண்ட ஆறு பேர் இன்று காலை விமானப்படையின் ஹெலிகொப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.

நித்தகைக்குளத்திலுள்ள வயல் காவலுக்காக சென்றிருந்த போது, கடந்த 3 நாட்களாக சிக்குண்டிருந்த மக்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.

நித்தகைக் குளம் உடைப்பெடுத்தமையால் சுமார் 1000 ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையினால் முல்லைத்தீவிலுள்ள குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்த மழையினால் தாழ்நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

இரணைமடு குளத்தின் நீர் மட்டம் 30 அடியாக உயர்வடைந்துள்ளது.

மன்னார் மாவட்டத்தின் மடு – வவுனியா பிரதான வீதியில் தம்பனை பகுதியில் வௌ்ளம் பாய்வதால் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சித்தாண்டி, வந்தாறுமூலை, தளவாய், சவுக்கடி, மயிலம்பாவௌி ஆகிய பகுதிகளிலுள்ள குடியிருப்புகள் நீரில் மூழ்கியுள்ளன.

சித்தாண்டி ஈரலக்குளம் கிராமத்திற்கான தரைவழிப் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது.

இதன் காரணமாக செங்கலடி பிரதேச செயலகத்தினால் படகு சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சீரற்ற வானிலையால் செங்கலடி பிரதேச செயலகத்தில் சுமார் 4000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் என்.வில்வரத்தினம் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது.

மூதூர் மணிக்கூட்டுக் கோபுரச்சந்தியினை ஊடறுத்து வௌ்ளம் பாய்வதால் மூதூர் – சம்பூருக்கான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது.

கட்டைப்பறிச்சான் இறால் பாலத்தினை மேவி வௌ்ளம் பாய்வதால் அம்மன் நகர், கணேசபுரம் ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

வௌ்ள அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பிலான கூட்டம் மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.

இதேவேளை, பதுளை – ஹாலிஎல – உணுகல பகுதியில் மண்சரிவினால் 2 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் இராவணா எல்ல பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்