வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில் காணி விடுவிப்பு தொடர்பில் விசேட கவனம்
by Staff Writer 08-11-2018 | 9:27 PM
Colombo (News 1st) வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணிக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் எஸ்.வியாழேந்திரன், வடக்கு - கிழக்கு மாகாண ஆளுநர்கள், ஜனாதிபதியின் செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.
வடக்கு, கிழக்கு மாகாணாங்களில் குடிநீர் வழங்கல் நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய உடனடி நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பில் இன்றைய கலந்துரையாடலில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில், வடக்கு - கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படையினர் வசமுள்ள அனைத்து காணிகளையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் விடுவிப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள
நிகழ்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டுள்ளது.
மடு புண்ணிய பூமியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனர்நிர்மாண நடவடிக்கைகளின் முன்னேற்றம் மற்றும் ஆனையிறவு உப்பளத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் உள்ளிட்ட அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ளஅறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பாதுகாப்புப் படையினரால் காணிகள் விடுவிப்பதில் தாமதம் ஏற்படுமாக இருந்தால், உடனடியாகத் தன்னுடைய கவனத்திற்குக் கொண்டுவருமாறு ஜனாதிபதி குறிப்பிட்டதாக கிழக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.