கடும்மழை காரணமாக பல குளங்களின் வான்கதவுகள் திறப்பு

கடும் மழை காரணமாக பல குளங்களின் வான்கதவுகள் திறப்பு

by Staff Writer 08-11-2018 | 9:15 AM
Colombo (News 1st) அதிக மழை காரணமாக அநுராதபுரம், மசகனதராவ குளத்தின் வான்கதவுகள் 2 திறக்கப்பட்டுள்ளதுடன், அநுராதபுரம் - நுவரவெவ வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் நாச்சதுவ குளத்தில் 6 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. இதனால், நகரத்திற்கு பிரவேசிக்கும் மல்வத்து ஓயா குறுக்குப்பாதை உள்ளிட்ட பாதைகள் சில நீரில் மூழ்கியுள்ளதுடன் வீடுகள் சிலவும் நீரில் மூழ்கியுள்ளன. அத்தோடு, அங்கமுவ குளத்தில் இரு வான்கதவுகளும் இராஜாங்கனை குளத்தின் 8 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. அதேநேரம், மழையுடனான வானிலை காரணமாக கலாவாவியின் 2 வான்கதவுகள் 5 அடி வரை திறக்கப்பட்டுள்ளன. இதனால், கலாவாவியிலிருந்து அவுக்கன வரையான வீதி மற்றும் கெக்கிராவ முதல் கல்நேவ வரையிலான வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, தம்புள்ளை, கண்டவல வாவி வான்பாயும் மட்டத்தை அடைந்துள்ளது. கல்கமுவ - அம்பன்பொல, அம்பகொல நீர்த்தேக்கத்தின் இரு வான்கதவுகள் 2 அடி வரை திறக்கப்பட்டுள்ளன. குறித்த நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் 3 வருடங்களின் பின்னர் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேநேரம், நிலவும் கடும் மழையுடனான வானிலையால் மட்டக்களப்பு - வாகரை வடக்கு பிரதேச செயலாளர் பிறிவிற்குட்பட்ட 382 குடும்பங்களைச் சேர்ந்த 1,244 பேர், 3 முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் தெரிவித்துள்ளார். இவர்கள் தற்போது ஊரியன்கட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, தட்டுமுனை மானிக்கம் தமிழ் வித்தியாலயம் மற்றும் தட்டுமுனை பாலர் பாடசாலை ஆகியவற்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, 3 நாட்களுக்கு ஒருமுறை பெய்யும் கடும் மழை காரணமாக, திருகோணமலை - மூதூர் பிரதேசத்தில் சிங்கள மத்திய மகா வித்தியாலயம் மற்றும் அதனை அண்டிய வீடுகளிற்குள் தண்ணீர் புகுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.