அதிக சதங்களைப் பெற்ற வீரராக ரோஹித் சர்மா பதிவு

20க்கு 20 அரங்கில் அதிக சதங்களைப் பெற்ற வீரராக ரோஹித் சர்மா பதிவு

by Staff Writer 07-11-2018 | 11:12 AM
Colombo (News 1st) மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான சர்வதேச இருபதுக்கு 20 தொடரை ஒரு போட்டி எஞ்சிய நிலையில் இந்தியா கைப்பற்றியது. இதேவேளை, சர்வதேச இருபதுக்கு 20 அரங்கில் 4 சதங்களை விளாசிய உலகின் முதல் துடுப்பாட்ட வீரர் என்ற மைல்கல்லை இந்தியாவின் ரோஹித் சர்மா எட்டியுள்ளார். லக்னோவ் மைதானத்தில் இரவு ஆட்டமாக நடைபெற்ற இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணித்தலைவர் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார். ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஜோடி முதல் விக்கெட்காக 123 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்திய அணியின் துடுப்பாட்டத்தை வலுப்படுத்தியது. ஷிகர் தவான் 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 8 பவுன்டரிகள், 7 சிக்சர்களுடன் சர்வதேச இருபதுக்கு 20 அரங்கில் 4ஆவது சதத்தை எட்டினார். இதன்மூலம், சர்வதேச இருபதுக்கு 20 அரங்கில் கூடிய சதங்களை விளாசிய வீரராக ரோஹித் சர்மா பதிவானார். இருபதுக்கு 20 அரங்கில் அணித்தலைவராக 2 சதங்களை விளாசியுள்ள வீரரும் ரோஹித் சர்மா என்பதும் சிறப்பம்சமாகும். நியூஸிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கொலின் முன்ரோ இருபதுக்கு 20 அரங்கில் 3 சதங்களை விளாசியமையே சாதனையாக இருந்தது. ​நேற்றைய போட்டியில் 111 ஓட்டங்களை பெற்றதன் மூலம் கொலின் முன்ரோவின் சாதனையை ரோஹித் சர்மா முறியடித்தார். மத்திய வரிசையில் லோகேஷ் ராகுல் 14 பந்துகளில் 26 ஓட்டங்களை விளாசினார். இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 195 ஓட்டங்களை பெற்றது. வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாட களமிறங்கிய மேற்கிந்தியதீவுகள் அணி தடுமாற்றமான ஆரம்பத்தை பெற்றதோடு 81 ஓட்டங்களுக்கு முதல் 7 விக்கெட்களையும் இழந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷாய் ஹோப் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க ஒருநாள் தொடரில் பிரகாசித்த சொலமன் ஹெட்மியர் 15 ஓட்டங்களுடன் வெளியேறினார். அணித்தலைவர் கார்லோஸ் ப்ராத்வெயிட் இறுதிவரை களத்தில் நின்று 15 ஓட்டங்களை பெற்றார். இந்தியாவின் கட்டுப்பாடான பந்துவீச்சுக்கு மத்தியில் ஏனைய துடுப்பாட்ட வீரர்களால் பிரகாசிக்க முடியாமல் போனது. Darren Bravo பெற்ற 23 ஓட்டங்களே அணி சார்பாக வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்களாக பதிவானது. இறுதியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது. போட்டியில் 71 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்தியா, 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 தொடரை ஒரு போட்டி எஞ்சிய நிலையில் கைப்பற்றியது.