மட்டக்களப்பில் அதிக மழை வீழ்ச்சி பதிவு

மட்டக்களப்பில் அதிக மழை வீழ்ச்சி பதிவு: வௌ்ளத்தால் பலர் இடம்பெயர்வு

by Staff Writer 07-11-2018 | 6:51 PM
Colombo (News 1st) வளிமண்டலத்தில் நிலவும் தாழமுக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரித்துள்ளது. இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு - பாசிக்குடா பகுதியில் 342.3 மில்லிமீட்டர் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடும் மழையையடுத்து, வாகரை வடக்கு பிரதேச செயலகப் பிரிவு பகுதியில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளது. வாகரை - ஊரியன்கட்டு கிராம சேவகர் பிரிவில் மூன்று முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 382 குடும்பங்களைச் சேர்ந்த 1244 பேர் இவ்வாறு தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஊரியன்கட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 92 குடும்பங்களைச் சேர்ந்த 273 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 162 குடும்பங்களைச் சேர்ந்த 544 பேர் தட்டுமுனை மாணிக்க வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தட்டுமுனை பாலர் பாடசாலையில் 128 குடும்பங்களைச் சேர்ந்த 425 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கியுள்ள பாடசாலையில் இன்றைய தினம் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, கட்டுமுறிவு - ஆண்டான்குளம் பிரதான வீதி வௌ்ளத்தில் மூழ்கியுள்ளது. திருகோணமலை - மூதூர், தோப்பூர், கிளிவெட்டி, பள்ளிக்குடியிருப்பு வயல் நிலங்களும் நிரீல் மூழ்கியுள்ளன. மூதூர் சிங்கள மகா வித்தியாலயம் மற்றும் கிளிவெட்டி பாரதி வித்தியாலய வளாகத்திலும், வகுப்றைக்குள்ளும் வௌ்ள நீர் புகுந்துள்ளது. மூதூரிலிருந்து சம்பூருக்குச் செல்லும் பிரதான வீதியின் மணிக்கூட்டுக் கோபுரச்சந்தி பகுதியிலும் வௌ்ளம் ஏற்பட்டுள்ளது. கிண்ணியா பிரதேசத்தில் இன்று மழையுடன் மீன் மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். கிண்ணியா அல் அஸ்ரா தேசிய பாடசாலையின் நான்கு வகுப்பறைகளில் வௌ்ளமேற்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்பு காரணமாக திருகோணமலையைச் சேர்ந்த மீனவர்கள் நேற்றும் இன்றும் கடற்றொழிலுக்குச் செல்லவில்லை. கடும் மழையையடுத்து, கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர் மட்டம் இன்று காலை 19.8 அடியாக உயர்ந்துள்ளது. குளத்தில் 22 அடிக்கு மேல் நீர் தேங்கும் பட்சத்தில் நெற்செய்கையை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என விவசாயிகள் குறிப்பிட்டனர். வவுனியா மாவட்டத்தில் சிறிய குளங்களின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடும் மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.